Tuesday 4 August 2015

ஆடி கிருத்திகை

08.08.2015 ஆடி கிருத்திகை 



      சிவகிரி – சக்திகிரி என்ற இரண்டு மலைகளை சிவன் அகத்தியரிடம் வழங்கி, “இதை மருதமலையில் வைத்து விடு.“ என்றார். “குறுமுனியான நான் எப்படி இந்த இரண்டு மலைகளையும் சுமப்பேன்.?“ என்று சந்தேக கேள்வி எழுப்பினார் அகத்தியர். “பூமியை சமமாக வைத்த நீ, சாதாரண இரண்டு மலையை சுமக்க முடியாதா?. உன்னால் முடியாதது எதுவும் இல்லை அகத்தியா.“ என்று ஈசன் கூறினார். 
       
       பல பூதங்களுக்கு தலைவனான சிவபெருமான், அந்த சிவ பூதங்களை நம்பாமல் தன்னிடம் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார் என்றால், இதில் ஏதோ காரணம் இருக்கிறது.“ என்ற சிந்தனையுடன் சிவன் கொடுத்த சிவகிரி – சக்திகிரி மலையை சுமந்து வந்து கொண்டு இருந்தார். வரும் வழியில் பாரம் தாங்காமல், “இந்த இரு மலைகளை எப்படி கீழே வைப்பது? யாராவது இருந்தால் கொஞ்சம் பாரத்தை இறக்கி வையுங்கள் என்று கூறலாமே இந்த பகுதியில் யாரையும் காணவில்லையே“ என்ற சிந்தனையோடு மலையின் பாரத்தை சுமக்க முடியாமல் சுமந்து நடந்து வந்தார் அகத்தியர். வரும் வழியில் இடும்பன் தவத்தில் இருந்தார். அவரை கண்டவுடன் மகிழ்ச்சியடைந்தார் அகத்தியர். “அசுரகுலத்தில் பிறந்தவனாக இருந்தாலும் நல்ல உள்ளம் படைத்தவன். சிறந்த சிவபக்தனும் கூட“ என்ற எண்ணத்தில் இடும்பன் அருகில் சென்று இடும்பனின் தவத்தை கலைத்து சடாசர மந்திரத்தை உபதேசித்தார் அகத்தியர். அசுரன் என்று கூட பாராமல் நல்ல உள்ளத்தோடு மந்திர உபதேசம் செய்யும் அகத்தியர் மீது அதிக மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டது இடும்பனுக்கு. 

      அப்போது அகத்தியரிடம் இரண்டு மலைகள் இருப்பதை கவனித்த இடும்பன், “கேட்பதற்கு தவறாக நினைக்க வேண்டாம். எதற்காக இரண்டு மலைகளை இப்படி சுமந்து செல்கிறீர்கள்?.“ என்றார் இடும்பன். இது சிவன் கொடுத்த மலைகள். இதனை மருதமலையில் வைக்க சொல்லி எமக்கு தந்த சிவ உத்தரவு. என்னால் இந்த மலைகளை சுமக்க முடியவில்லை. சிறிது தூரம் நீ சுமந்து கொண்டு வர முடியுமா?.“ என்றார் அகத்திய முனிவர். “இதை சுமக்க நான் பாக்கியம் செய்து இருக்க வேண்டும்.“ என்று கூறிய இடும்பன், நீண்டு வளர்ந்த ஒரு மரத்தை வேருடன் பிடிங்கி,  மரத்தின் ஒரு முனையில் ஒரு மலையையும் மறுமுனையில் இன்னொரு மலையும் கட்டி, காவடி எடுப்பது போல் சுமந்து வந்தார் இடும்பன்.  வேகு தூரம்  நடந்து வந்த களைப்பால்  பழனியில் சிறிது நேரம் மலையை இறக்கி வைத்தார் இடும்பன். அப்போது வேடன் உருவத்தில் ஒரு சிறுவன் தோன்றி, அந்த இரண்டு மலைகளையும் திரும்ப எடுக்க முடியாத அளவு தன் கால்களால் பிடித்து வைத்திருந்தான். “பொடிப்பயல் இவன், நம்மிடமே வித்தை காட்டுகிறானா?“ என்ற கோபம் கொண்டு அந்த சிறுவனிடம் சண்டையிட்டார் இடுமபன். 

       சிறுவனாக இருந்தாலும் அவன் தந்த பதிலடியை தாங்க முடியாமல் இறந்தான் இடும்பன். இதை அறிந்த இடும்பனின் மனைவி இடும்பி, அகத்திய முனிவரிடம் சொல்லி கதறி அழுதாள். சிறுவன் உருவத்தில் வந்தது முருகன் என்பதை அறிந்த முனிவர், “நீ முருகனிடம் சென்றே நியாயம் கேள். அவர் கருனை செய்வார்.“ என்றார் அகத்தியர். 

       அதன்படி முருகனிடம் சென்று கண்ணீர் விட்டு கதறினாள் இடும்பி. இடும்பியின் வருத்ததை பார்த்து கருனை உள்ளத்துடன் இடும்பனை மீண்டும் உயிர் பெற செய்து தம்பதியினருக்கு ஆசி வழங்கினார். “இடும்பா… நீ சுமந்து வந்தது எனக்குரிய மலைகளைதான். நீ காவடி சுமந்து வந்த விதம் சிறப்பானது. இவ்வாறு பக்தர்கள் எனக்காக காவடி எடுத்து வரும் போது, “நீ அவர்களுக்கு துணையாக இருந்து காக்க வேண்டும்.“  

       காவடி எடுக்கும் பக்தர்கள் வாழ்வில் இன்னல்கள் இல்லாமல் இருக்க, நீயும் அவர்களுக்கு துணை இருக்க வேண்டும்.” என்றார் முருகப் பெருமான். ஆடி கிருத்திகை அன்று இடும்பனை போல் நாமும் காவடி எடுத்தால் கவலைகள் மறையும். “காவடி எடுத்தேன் கவலையை மறந்தேன்” என்று பக்தர்கள் சொல்வார்கள். அது உண்மையும் கூட. காவடி எடுக்கும் போது இடும்பன் நம்முடனே வருவார். முருகப்பெருமானின் ஆசியை நமக்கு அள்ளி தர இடும்பனும் நமக்காக கந்தனிடம் வேண்டுவார். 

       முருகனை வணங்கினால் வெற்றி மேல் வெற்றி கிட்டும் என்று ராமாயணத்திலேயே இருக்கிறது. சீதை, இராவணனால் கடத்தப்பட்ட பிறகு இலங்கைக்கு ஆஞ்சனேயர் சென்று சீதையை கண்டுபிடித்து பார்த்து விட்டு வரும் வழியில் இலங்கையில் இருந்த முருகன் கோயிலுக்கு சென்று வணங்கினார் ஆஞசனேயர். பேச்சு திறனுக்கு அதிபதியான முருகனை வணங்கிய பிறகுதான் “சொல்லின் செல்வன்“ என்று ஸ்ரீராமரால் ஸ்ரீஅனுமன் அழைக்கப்பட்டார். முருகப்பெருமானுக்கு காவடி எடுத்தால், நம்முடைய கஷ்டத்தைஅந்த முருகப்பெருமானே சுமப்பார். வாழ்வில் ஒருமுறையாவது முருகப்பெருமானுக்கு காவடி எடுத்தால் இந்த பிறவியில் நாம் பெரும் பாக்கியசாலி. 

       முருகப்பெருமானுக்கு முல்லை மலர்களை அணிவித்து வணங்கினால் மிகவும் விசேஷமானது. ஆடி கிருத்திகை அன்று, முருகப்பெருமானுக்கு உகந்த ஆறுபடை வீடுகளில் ஒன்றையாவது தரிசியுங்கள். இயலாதவர்கள் உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் முருகப்பெருமானின் திருக்கோயிலுக்கு சென்று வாசனை மலர்களை தந்து வணங்கினால் எல்லா நலமும் வளமும் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். பேச்சு திறன் சிறப்பாக இருக்கும். நாம் அனைவரும் முருகப்பெருமானை வணங்கி நலங்களும் வளங்களும் பல பெற்று வளமோடு நலமோடு கந்தன் அருளால் சிறப்பு பெறுவோம். கந்தனுக்கு அரோகரா – முருகனுக்கு அரோகாரா – வேலனுக்கு அரோகரா!

No comments:

Post a Comment