Tuesday 4 August 2015

கருட பஞ்சமி சிறப்பு கட்டுரை !

கருட பஞ்சமி சிறப்பு கட்டுரை !

இறைவனை எப்படி வணங்குகிறோமோ அதுபோல இறைவனுடைய வாகனத்தையும் வணங்க வேண்டும். விஷ்ணு பகவானின் வாகனமான கருடனை வணங்கினால், அவர்களுக்கு திருமாலின் ஆசியும் அனுகிரகமும் கிடைக்கும். ஆம். ஸ்ரீமந் நாராயணனின் எல்லா அவதாரங்களிலும் கருடன், பெருமாளுக்கு உதவியாக இருந்தார். 




ஸ்ரீராமஅவதாரத்தில் மால்யவனுக்கும் ஸ்ரீராமருக்கும் யுத்தம் நடந்தபோது, ஸ்ரீராமரின் மீது வெயில்படாமல் இருக்க, கருடபகவான் ஆகாயத்தில் தன்னுடைய  இரண்டு இறக்கைகளையும் விரித்து இராமரின் மீது வெயில்படாமல் காத்தார். 

அதேபோல கிருஷ்ணஅவதாரத்தில், ஸ்ரீகிருஷ்ணபகவான் காளிங்க நர்த்தனம் ஆடியபோது பெரிய கிரீடத்தை கொண்டுவந்து கிருஷ்ணபரமாத்மாவின் தலையில் வைக்க சென்றார். இதை கண்ட யசோதையும் – யாதவர்களும் “என்ன இது.? இந்த கருடன், பெரியதாக இருக்கும் கிரீடத்தை இந்த சின்ன குழந்தையின் தலையில் வைக்கச் செல்கிறதே. எப்படி கிரீடம் பொருந்தும்?” என்று நினைக்கும் போது, கருடன், பாசத்துடன் குழந்தை கிருஷ்ணனின் தலையில் அந்த கிரீடத்தை வைத்தவுடன் அந்த பெரிய கிரீடம், குழந்தை கண்ணனின் தலைக்கு ஏற்றதாக மாறி பகவானை அழகாக அலங்கரித்தது. கிரீடம் சிறியதாக மாறியதை கண்டு அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள். 

பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும்இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். 

முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை,  ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது,  பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். அத்துடன் நாகத்திற்கும் பூஜை செய்ய வேண்டும். இதனால் நாகதோஷத்தில் இருந்து விடுபட வழி பிறக்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது. நாகத்தையும் கருடபகவானையும் பூஜித்து அவர்களுடைய அருள் ஆசியை பெற்று பல்லாண்டு பல்லாண்டு நலமோடும் வளமோடும் வாழ்வாங்கு வாழ்வோம்.

ஸ்ரீ ராம ஜெயம்!

ஸ்ரீ ராம ஜெயம்!

ஸ்ரீ ராம ஜெயம்!

No comments:

Post a Comment